திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள பிரபல தனியார் எலும்புமுறிவு மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் லிப்டில் சிக்கிக்கொண்டவர்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள், போலீசார், மருத்துவர்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ நடைபெற்ற இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுமி என ஆறு பேர் உயிரிழந்ததாகவும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
"உரிய நடவடிக்கை": இந்த நிலையில்,திண்டுக்கல்லில் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 வழங்கினார்கள்.
பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் என்ற வகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினால் எந்த நோயாளிகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவருக்கு மட்டும் 10 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலும் இன்றி ஆறு பேர் தாங்களாகவே லிப்டில் பயணம் செய்துள்ளனர். மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுமி என ஆறு பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட வர்களுக்கு தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்களால் ஏராளமானோர் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் கேள்விப்பட்டவுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கள அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று பெரும்பாலானோர் வீடு திரும்பி உள்ளனர். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 41 பேரில் ஆறு பேர் மரணம் அடைந்தது போக மீதமுள்ள 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தனியார் மருத்துவமனைக்கு எந்தந்த வசதிகள் இருக்க வேண்டுமோ அது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறையினர் முழு அறிக்கை கொடுத்தவுடன் எந்த மாதிரியான விதிமீறல்கள் உள்ளது என ஆய்வு செய்யப்படும். தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த ஹைதராபாத் விமானம்.. வந்த வழியே திரும்பி சென்றது!