திண்டுக்கல்: நத்தம் கோவில்பட்டி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மகன் பிரவீன் (வயது 41). இன்ஜினியராக உள்ள இவர் திமுக நத்தம் பேரூராட்சி மாணவர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரை, காரின் ஓட்டுநர் கோவில்பட்டி அருகே காக்காபட்டி செல்லும் சாலையில் உள்ள கார் செட்டில் நிறுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை இரவு எடுத்துச் சென்றுள்ளார்.
கார் செட் பூட்டி இருந்ததால், அதை திறப்பதற்காக காக்காபட்டி சாலை ஓரத்தில் காரை நிறுத்தி உள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் நத்தம் பேரூராட்சி 15-வது வார்டு திமுக கவுன்சிலர் வைதேகியின் கணவர் கொண்டையம்பட்டியைச் சேர்ந்த குமராண்டி என்பவர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.
அவர், "காரை ஏண்டா நடுரோட்டில் நிறுத்தி இருக்க. ஒழுங்கா வண்டியை எடுடா" என்று ஓட்டுநரை திட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் திடீரென காரின் பின்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து, கார் உரிமையாளர் நேரில் வந்து கேட்டதற்கு அவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து பிரவீன் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் நத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து (FIR 425/2024) தகராறில் ஈடுபட்டு கார் கண்ணாடியை உடைத்த குமராண்டி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பேரூராட்சி திமுக கவுன்சிலரின் கணவர் குடிபோதையில் சொந்த கட்சிக்காரரின் காரை அடித்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 50 லட்சம் வழிப்பறி; கொள்ளை கும்பலை வலைவீசி தேடும் சென்னை போலீஸ்! - hawala money theft