திருநெல்வேலி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிந்துபூந்துறையில் உள்ள தெஷணமாற நாடார் சங்க அலுவலகத்தில் வைத்து சங்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கோரினார்.
இந்த சந்திப்பின் போது கனிமொழி எம்பி சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், "ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வியாபாரிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள் என்பதை நன்கு அறிவோம். ஜிஎஸ்டியில் சிறு தவறு நடந்தால் கூட அபராதம் விதிக்கிறார்கள்.
ஒன்றிய அரசு தொடர்ந்து வியாபாரிகளைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரிகளின் வியாபாரத்தையும் பொருளாதாரத்தையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் சூழலை உருவாக்கி உள்ளது. ஜிஎஸ்டி பல நாடுகளில் குழப்பம் இல்லாமல் தெளிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் யாருக்கும் பிரச்சனை இல்லாமல் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மாற்றி அமைப்போம் என நாங்கள் உறுதி அளிக்கிறோம். நாங்கள் ஒரு வாக்குறுதி அளித்தால் அதைச் செயல்படுத்திக் காட்டுவோம்.
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், இந்திய நாட்டையும், தமிழ்நாட்டையும் காக்க வேண்டிய தேர்தல். தமிழ் மக்களையும், தமிழர் அடையாளத்தையும் காக்க வேண்டிய தேர்தல். நமக்குள் இருக்கும் சிறு சிறு வருத்தங்களை மிகைப்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் வாக்களித்தால் நமக்குத் தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். இந்துக்களுக்கு நல்லது செய்வதாக பாஜக பொய்யான செய்திகளைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் நீண்ட நாட்களாக ஓடாமல் இருந்தது திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் தான்.
திமுக ஆட்சியில் 1000க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரி பாஜக தான். திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர் போன்று பாஜக சித்தரித்து வருகிறது. இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் தான் இருக்கிறார்கள். உங்களுடன் இருப்பவர் யார், உங்களுக்காகப் போராடுவது யார் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.
இந்த தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் புரூட்ஸுக்கு கை சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று பேசினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்திலும், தூத்துக்குடியில் உதயசூரியன் சின்னத்திற்கும் ஆதரவு அளிப்பதாக தெஷணமாற நாடார் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்தில் அக்கட்சிக் கொடியும் இல்லை.. நிர்வாகிகளும் இல்லை - நெல்லையில் நடப்பது என்ன? - Parliamentary Election Campaign