திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த 4ஆம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக அவரது உடலை போலீசார் மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்வழக்கை புலனாய்வு செய்ய கூடுதல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்
இந்த நிலையில், ஜெயக்குமார் எழுதியதாகக் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு சம்மன் அனுப்பி போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் நெல்லை மாவட்ட போலீசார் நடத்தி வரும் இந்த வழக்கு குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதில், "நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என முழு விவரங்களையும் திரட்டுவதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கின் மொத்த ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் நெல்லை மாவட்ட போலீசார் ஒப்படைக்க உள்ளனர் என்றும், அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, இந்த வழக்கு முறித்த விசாரணை அதிகாரிகளும் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், மீண்டும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “மோடி - அதானி நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டும்”.. காங்கிரஸ், சிபிஎம் வலியுறுத்தல்!