சென்னை: துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் காலை 8.15 மணிக்கு வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து மீண்டும் காலை 9.50 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு செல்லும். அதைப்போல் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 240 பயணிகளுடன் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
வழக்கமாக, இந்த விமானமானது, சென்னை நோக்கி வரும்போது வடக்கு திசை ஓடுபாதையிலும், அங்கிருந்து வெளியே செல்லும்போது, மீண்டும் தெற்கு திசை நோக்கி திரும்பி வந்து, டேக் அப் ஆகி வானில் பறக்கத் தொடங்கும். அதைப்போல் நேற்றும் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த, விமானம் தெற்கு திசை நோக்கி திரும்பாமல் வடக்கு திசையில் நின்று விட்டது.
பின் அதே இடத்தில் நீண்ட நேரமாக நின்றது. அதன் பின்பு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தரைதளம் பராமரிப்பு பணியாளர்களுக்கு, தெரியப்படுத்தி அவர்கள் இழுவை வண்டி மூலமாக விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: சென்னையில் டூ லண்டன் விமானம் திடீர் ரத்து.. காரணம் என்ன?
அதன் பிறகு அந்த விமானத்தின் சக்கரங்கள் சரி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக காலை 11.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 10 மணியிலிருந்து, 11.10 வரை முதலாவது பிரதான ரன்வேயில் விமானங்கள் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவது உட்பட அனைத்து சேவைகளும், சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடு பாதையில் இயக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த பயணிகள் சிலர் டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனுக்கு புகார் தெரிவித்தனர். அதோடு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இதைப்போல் அடிக்கடி தாமதம் ஆவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன், சென்னை விமான நிலையத்தில் முதலாவது பிரதான ரன்வே வெள்ளிக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படதற்கான விரிவான விசாரணைக்கு, நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரேசில் விமான விபத்து: 62 பேர் உயிரிழப்புக்கு என்ன காரணம்?