திருச்செந்தூர்: தமிழ் மாதமான பங்குனியில் தோன்றும் உத்திர நட்சத்திர தினத்தை பங்குனி உத்திரமாக மக்கள் அனுசரிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திரம் நேற்று (மார்ச்.24) நண்பகல் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணி வரை அனுசரிக்கப்பட்டது.
இந்த நாளில் மக்கள் அவரவர்களின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், கோயில்களிலும் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு சிறப்புப் புகைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை விமரிசியாக நடைபெறும். அந்தவகையில் திருச்செந்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற முருகன் கோயிலிலும் சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தன.
அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தின் போது சாமி தரிசனம் செய்ய, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில், வெகு நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
அதிகாலை 3 மணி அளவில் பக்தர்களில் கூட்டம் கூட துவங்கிய நிலையில், சுமார் 8 மணி நேரமாகக் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அடிப்படை வசதிகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர், கழிவறைகள் போன்ற எந்த வசதிகளும் இல்லை என்றும் குற்றம் சாடினர். மேலும், கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓசூர் சந்திரசூடேஷ்வரர் கோயில் தேர் திருவிழா