விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்த கோயிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவின் இறுதிநாளன்று, பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவங்களில் தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்களை, இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இந்த எலுமிச்சை பழத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
இடும்பன் பூஜைக்குப் பிறகு, கோயிலின் தலைமை பூசாரி ஆணி பதித்த காலனியில் நின்று ஏலத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, பூசாரிகள் ஏலத்தை நடத்தினர். குழந்தை பாக்கியம் தரக்கூடியதாக கருதப்படும் முதல் உற்சவ எலுமிச்சை பழம் 50,500 ரூபாய்க்கு ஏலம் போனது. 9 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், மொத்தம் 9 எலுமிச்சை பழங்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.
குழந்தை பாக்கியம் வேண்டி அந்த எலுமிச்சை பழத்தை தி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் - கனிமொழி தம்பதியினர் ஏலம் எடுத்தனர். எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக, இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த வினோத திருவிழாவில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்று முழுங்கி முருகனை வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Viluppuram Lok Sabha Constituency