தஞ்சாவூர்: தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த 16ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.22) நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், காஷ்மீர் மக்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலர் திடீரென நடிகர் கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அங்கி இருந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு கருவின் மூலம் தீயை அணைத்தனர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் சுரேஷ் சேவியர், சேகர், ராஜா மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அமரன் திரைப்படத்திற்கு இன்னும் வெளியிட்டு தேதியே அறிவிக்காத நிலையில், தற்போது எதிர்ப்பு கிளப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி.. நடந்தது என்ன?