திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம் சன்னதி தெருவில் உள்ள ஒரு கடையில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், பால், தயிர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் மதிய வேளையில் குளிர்பானம் அருந்தலாம் என ஜூஸ் கடைக்கு சென்று குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
குளிர்பானத்தில் பல்லி: அதைக் குடிக்கலாம் என முற்பட்டபோது குளிர்பானத்தில் பல்லி ஒன்று இறந்த நிலையில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, 'எனக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது, வேண்டுமென்றால் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்' என அலட்சியமாகப் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்த குளிர்பானம் தயாரித்த நிறுவனத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் தொலைப்பேசி வாயிலாக தகவல் அளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை குளிர்பானம் நிறுவனமும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் குளிர்பானம் தயாரித்த நிறுவனம் மற்றும் அதனை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலையில் சிறுமி ஒருவர் சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான உணவு பொருட்கள் கிடைக்கும் வண்ணம், மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்திட வேண்டும் எனவும் கோரிக்கைவைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்க நமது ஈடிவி பாரத் செய்தியாளர் கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் கோவில் திருவிழாவில் மோதல்.. இளைஞர் குத்திக் கொலை.. இருவர் கைது!