சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், அமுதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததுள்ளது.
மேலும், நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் அந்தப் பகுதியில் செல்லக்கூடிய அடையாறு ஆற்றில் மழைநீர் முழு கொள்ளளவை எட்டி குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி குளம் போல் காட்சியளிக்கிறது. இது குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புயல் நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி அளிவில் கரையை கடந்த நிலையில் சென்னையின் முடிச்சூர், ராயப்பா நகர், லட்சுமி நகர், பிடிசி கோட்ரஸ் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இருளில் மூழ்கி இருந்த நிலையில் இன்று காலை மின்சார சேவை வழங்கப்பட்டது.
மேலும் இந்த சூறாவளி காற்றால் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் 27ஆவது வார்டு, கலைஞர் நகர் முதல் தெருவில் தென்னை மரம் அடியோடு சாய்ந்து மின்சாரம் கேபிள் மீது விழுந்ததில் தனியார் இன்டர்நெட் கம்பம் சாய்ந்து கிழே விழுந்துள்ளது. சாலையின் குறுக்கே விழுந்த இந்த தென்னை மரம் மற்றும் மின்கம்பத்தால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தும்படி மாநகராட்சிக்குக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: புயல் கடந்தும், தொடரும் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் பாலச்சந்திரன் கூறியதென்ன?
இதன் தொடர்ச்சியாக மேற்கு தாம்பரத்திலிருந்து கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் அந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க அரசின் மோட்டார் பம்புகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும், மறு அறிவிப்பு வரும் வரை கனமழைக்கான எச்சரிக்கை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஃபெங்கல் புயல் காரணமாக நேற்று மதியம் முதல் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பி, விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.