மதுரை: சர்வேதச பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் கூறி 96.5 லட்சம் ரூபாய் பணமோசடி செய்த வழக்கில் ஆறு பேரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜூன் மாதம், 21 அன்று மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை ஆன்லைன் வர்த்தகம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்ஆப் வாயிலாக ஒரு கும்பல் தொடர்பு கொண்டது.
சுமார் ஒரு கோடி பணமோசடி
இதில், தனது பணம் 96 லட்சத்து 57ஆயிரத்து 953 ரூபாயை அந்த கும்பலின் வங்கிக் கணக்கில் செலுத்திய பாதிக்கப்பட்டவர், பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து, தன்னிடம் ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இக்குற்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பணம் அனுப்பப்பட்ட பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.38,28,000 (38 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்) முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு இதுவரை சுமார் 12 லட்சம் ரூபாய் நீதிமன்றம் வாயிலாகத் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
முறையற்ற ஆன்லைன் வர்த்தகம்
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்தபோது, அதில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரிடமிருந்து சைபர் குற்றவாளிகள் 20 லட்ச ரூபாயை ஆன்லைன் பணமோசடி செய்துள்ளனர்.
அந்த பணத்தை திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சேக்தாத் மகன் சீனி முகமது என்ற நபரின் இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை சீனிமுகமது பணமாக திரும்பப்பெற்று, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்ததை தனிப்படை காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்தனர்.
பல பேருக்குத் தொடர்பு
தொடர்ந்து சீனிமுகமது வங்கி கணக்குகளை முடக்கம் செய்ததோடு, திருச்சி சென்று அவரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அதில், சீனிமுகமது தனது வங்கி கணக்குகளை திருச்சி உறையூரை சேர்ந்த லியாகத்அலி மகன் இப்ராகிம் என்பவரது ஆலோசனையின் பேரில் தரகுத்தொகைக்கு ஆசைப்பட்டு, திருச்சி தனரத்தின நகரை சேர்ந்த அப்துல் நசீர் மகன்கள் முகமது சபீர், முகமது ரியாஸ், திருச்சி உறையூரைச் சேர்ந்த லியாகத் அலி மகன் முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியை சேர்ந்த முகமது தாஜீதீன் மகன் முகமது மர்ஜுக் ஆகியோருடன் சேர்ந்து குற்றம்புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு, ஆயிரம் ரூபாய் கமிஷனாக இதுவரை லட்சக்கணக்கில் பணம் பெற்றள்ளதும் தெரியவந்தது. காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பல மாநிலங்களில் பரவிக்கிடக்கும் சைபர் மோசடி நெட்வொர்க்
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சைபர் குற்றவாளிகள் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி பண மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், இவர்கள் மேற்குவங்காளம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவர் தாக்குதல்: ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவரின் முகத்தைப் பதம்பார்த்த மன நோயாளி!
இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைதுசெய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியதோடு, பிற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் எச்சரித்துள்ளார். பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை டோங்ரே பிரவீன் உமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.