சென்னை: சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லும் டிரான்சிட் பகுதியில் உள்ள பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை மையமாக வைத்து தங்க கடத்தல் நடப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை இலங்கை வாலிபர் கடத்தி கொண்டு வந்து சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்த போது சுங்க இலாகா அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த யூடிப்பர் சபீர் அலி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த கடையில் 7 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளார். விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுமதியுடன் பாசும் வாங்கி இருந்தார்.
அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து ட்ரான்சிட் பயணிகள் கடத்திக் கொண்டு வரும் தங்கம் கட்டிகளை விமான நிலையம் பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சபீர் அலிக்கு தெரிவித்து விடுவார்கள். சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி தங்கத்தை உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியில் கொண்டு வந்து சுங்கச் சோதனையும் இல்லாமல் கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.
இவ்வாறாக கடந்த 2 மாதங்களாக கடத்தல் தொழில் சென்னை விமான நிலையத்தில் கொடி கட்டி பறந்து தெரிய்வந்துள்ளது. 2 மாதங்களில் 167 கோடி ரூபாய் மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை கடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கை சேர்ந்த கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தல் கும்பலில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விமான நிலையத்தில் சில்லரை விற்பனை செய்யும் கடைகளை வித்வேதா பிஆர்ஜி நிறுவனம் குத்தகைக்கு பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சபீர் அலிக்கு விமான நிலைய ஆணையக கமர்சியல் இணை பொது மேலாளருக்கு பாஜக நிர்வாகியான பிருத்வி பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
விமான நிலைய ஆணையக அதிகாரி விசாரணை நடத்த வேண்டி ஆறு நபர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.1.50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு; இந்திய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவு! - Medical Negligence case