சென்னை: சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளைச் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்தியாவின் வடமாநிலத்தைச் சேர்ந்த கங்கா ஆஷார்(36) என்ற இளம்பெண் ஒருவர், இவ்விமானத்தில் சென்னையிலிருந்து இலங்கை செல்வதற்காக வந்திருந்தார். அப்போது அந்த பெண் பயணி மீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அந்த பெண் பயணியை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில், பெண் பயணி இலங்கை சென்று, அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளார்.
ஆனாலும், அவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சில் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண் பயணியை, தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த பெண் பயணி தனது உள்ளாடைகளுக்குள், கட்டுக்கட்டாக குவைத் தினார் வெளிநாட்டுப் பணம் பெருமளவு மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், மொத்தமாக 8,500 குவைத் தினார் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.23 லட்சம் ஆகும்.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வடமாநில பெண் பயணியான கங்கா ஆஷாரின் பயணத்தை ரத்து செய்ததோடு, அவரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வட மாநில பெண் பயணி கங்கா ஆஷாரை கைது செய்து, வெளிநாட்டுப் பணத்தையும் பறிமுதல் செய்ததுடன், அவரிடம் இந்த வெளிநாட்டுப் பண கட்டுகளை கொடுத்து அனுப்பியது யார்? எனத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயற்சி.. சென்னையில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்!