தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே புளியம்பாடி கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியனின் தாய் மறைந்த சிந்தாமணியின் உருவப் படத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப்.01) நேரில் சென்று திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று பாராளுமன்றக் கூட்டத்தில் வாசித்தது மோடி அரசால் தயார் செய்து தரப்பட்ட உண்மைக்கு மாறான, தவறான புள்ளி விவரங்கள். உலக அளவில் உள்ள ஆய்வு நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமாக போய் கொண்டிருக்கும் செய்தியை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
மறுபக்கம், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டு இருப்பதாக இல்லாத ஒன்றை மோடி கூறுகிறார். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன், 80 சதவீத மக்களுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என மோடி கூறுகிறார். வறுமையை மீட்டது உண்மையானால், இலவச அரிசி கொடுப்பதற்கானத் தேவை எதற்கு? போகிற போக்கை பார்த்தால் தேர்தல் நடத்தாமலேயே, தான் வெற்றி பெற்றதாக அவரே அறிவித்துக் கொள்வார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தஞ்சை மாவட்டத்தை, மதுரை மாவட்டத்தைகூட ஒரு மாநிலமாகப் பிரித்து அறிவிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மொழிவாரி மாநிலங்கள் இருக்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள். மாநிலங்களே கூடாது, மாநில உரிமைகள் கூடாது, மாநில சட்டமன்றங்களே இருக்கக் கூடாது என நினைப்பவர்கள் பாஜக.
பாஜகவை எதிர்த்தால், அவர் மாநில முதல்வராக இருந்தால் கூட பல்வேறு அரசுத் துறைகள் மூலம் நெருக்கடி தருவார்கள். கைது, சிறைவாசம், ஜாமீன் மறுப்பு என சர்வாதிகார ஆட்சிதான் மத்தியில் நடைபெறுகிறது. இதுதான் இன்று ஜார்கண்ட் முதல்வருக்கும் நேர்ந்துள்ளது. அவரும் பாஜகவிற்கு ஆதரவு அளித்திருந்தால், நிதிஷ்குமாரைப் போல புனிதராக மாறியிருப்பார். நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டுகளே இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராக இருப்பதற்கே அருகதையற்றவர். வெண்மணி கலவரத்தில் காயமடைந்த பழனிவேலைச் சந்திக்க ஆளுநர் திட்டமிட்டிருந்தபோது, பழனிவேல் அவரை சந்திக்க மறுப்பதாகவும், அவரை வரவேற்க மாட்டேன் என்றும், வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் கூறியுள்ளார். ஆனால், அதையும் மீறி அவர் வீட்டிற்குச் சென்று அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துள்ளார்.
அவரை வலுக்கட்டாயமாக சென்று சந்தித்தப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து களங்கம் பூசும் வகையில் விமர்சித்துள்ளார். அவ்வாறு பேச ஆளுநருக்கு என்ன உரிமை உள்ளது? ஆளுநரின் தகுதிகளை, பொறுப்புகளை உணராமல், அரசியல் கட்சியைச் சார்ந்தவர் போல, பிற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்பதே ஒரு மோசடி திட்டம்தான். இதில் 40 சதவிகித தொகைதான் மத்திய அரசு வழங்குகிறது. 60 சதவிகித தொகை மாநில அரசுதான் வழங்குகிறது. ஆனால், இதற்கு பெயர் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம். கோயிலைக் கட்டி, அதை வைத்தே ஓட்டு வாங்கிவிடலாம் என மோடி நினைக்கிறார். ராமர் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள் எல்லாம் பாஜகவிற்கு வாக்களிப்பார்களா? இறை நம்பிக்கை என்பது வேறு, அரசியல் என்பது வேறு” என கூறியுள்ளார்.
மேலும் மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படும் வகையில் நடத்து கொள்வதைக் கண்டித்தும், மோடி அரசை எதிர்க்கும் மாநில அரசுகளை, அங்குள்ள மாநில ஆளுநர்களை வைத்து மிரட்டுவதையும் கண்டிக்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் நலப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் தர்ணா போராட்டம் வருகிற பிப்.8ஆம் தேதி டெல்லியில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ளதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், நாளை திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உலகளாவிய விளையாட்டு மையமாக உள்ளது தமிழ்நாடு" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்