புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி சுயமரியாதையுடன் முதலமைச்சராக இருக்கிறாரா? சுயமரியாதையுடன் அவர் இயங்குகிறாரா? என இன்று (ஏப்.08) ரெட்டியார்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ரெட்டியார்பாளையம் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதை நிறைவேற்றி அந்த சாதனைகளைச் சொல்லி அங்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் வாக்குறுதி கொடுத்தால் நிச்சயமாக நிறைவேற்றுவார். புதுச்சேரியிலும் மாநில அந்தஸ்து, பஞ்சாலைகள் திறக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டுச் சென்றுள்ளார். இந்தியாவில் ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி நாடு முழுவதும் களத்தில் உள்ளது.
மோடி புதுச்சேரிக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. புதுச்சேரியில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைச் சீரழிப்பதற்காக 250 ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் பரவியுள்ள கஞ்சா காரணமாக, சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இருக்கிறார்”, என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் நியாயவிலைக்கடைகள் உள்ளன. அங்குப் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் நியாயவிலைக்கடைகளை திறப்பதற்கு ஆளும் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுயமரியாதையுடன் முதலமைச்சராக இருக்கிறாரா? சுயமரியாதையுடன் அவர் இயங்குகிறாரா? சுயமரியாதையை இழந்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார். சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியால் மாநில மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?”, என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்தியா கூட்டணியை எதிர்த்து நிற்கும் கூட்டணியில் ஒன்று நள்ளிரவு கூட்டணி, மற்றொன்று கள்ளக்கூட்டணி. சமூக நீதிக்கு நேர் எதிரான கட்சியான பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இன்று வரை மோடியை எதிர்த்துப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.
தமிழகத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல, அனைத்து பாஜக வேட்பாளர்கள் வீடுகளிலும், வாக்குக்குப் பணம் கொடுப்பதற்காகப் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பணத்தை நம்பி தேர்தலைச் சந்திக்கும் அனைத்து பாஜக வேட்பாளர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பரக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும்”, என வலியுறுத்தினார்.