வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த பொம்மன்குட்டை கொள்ளைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜீவா (30) டயானா (25) தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், டயானா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்த நிலையில், டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்து 9 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த நிலையில், அந்த குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், ஜீவா -டயானா தம்பதியே அவர்களது குழந்தையை விஷ பால் கொடுத்து கொன்று புதைத்தது அம்பலமானது.
ஆனால், போலீஸ் சுதாரிப்பதற்குள் இருவரும் அருகே இருந்த காட்டு பகுதிக்கு சென்று தலைமறைவாகினர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், இருவரும் அவர்களுடைய உறவினர் உமாபதி என்பவர் வீட்டில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஜீவா மற்றும் டயானாவை கைது செய்ததோடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உமாபதியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பெண் குழந்தை வேண்டாம் என்பதற்காக விஷ பால் கொடுத்து கொலை செய்ததாக தம்பதியினர் இருவரும் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து, வேப்பங்குப்பம் போலீசார் அவர்கள் மீது 103(1), 238BNS (பாரதிய நியாய சன்ஹிதா) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் சிறையில் அடைக்க ஜே.எம். 1 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.
இந்த நிலையில், 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சத்தியகுமார் உத்தவிட்டார். இதனையடுத்து, குழந்தையின் தந்தை ஜீவாவை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், குழந்தையின் தாய் டயானாவை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் அடைத்தனர்.
இதையும் படிங்க: வேலூரை உலுக்கிய பெண் குழந்தை கொலை வழக்கு.. தலைமறைவான தம்பதி கைது..! கலங்கடிக்கும் பின்னணி!