வேலூர்: ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் ஜீவா (30). இவருக்கும் ஒடுகத்தூர் அடுத்த ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த டயானா (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், டயானா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். கடந்த 27ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் டயானாவை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, டயானாவிற்கு ரத்த அளவு குறைந்து இருந்ததால் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், 9 நாட்கள் கழித்து நேற்று தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
குழந்தைக்கு பெயரும் வைத்துள்ளனர். ஆனால், ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த தம்பதி மீண்டும் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால், வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை கல் நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் பெற்ற குழந்தை என்றும் பாராமல் பிஞ்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர்.
மூக்கில் ரத்தம் கொட்டி இறந்த குழந்தை: சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து இறந்துள்ளது. பின்னர், இது எதுவுமே நடக்காதது போல், குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளது, உடனே வந்து பார்க்கும்படி டயானா தனது தாய், தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரியவந்தது.
அப்போது, குழந்தை எப்படி இறந்தது என்று டயானாவின் தந்தை சரவணன் கேட்டுள்ளார். அதற்கு, ஜீவா, போர்வையை எடுத்து குழந்தை முகத்தில் போட்டு விட்டதால் தான் குழந்தை இறந்தது என்று கூறி இருவரும் நாடகமாடியுள்ளனர். குழந்தை இறந்த விஷயத்தை ஜீவா தனது தந்தையிடம் கூட சொல்லவில்லையாம். பின்னர், டயானாவின் தந்தையும், தாயும் சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதற்குள் ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா அவசர அவசரமாக வீட்டின் அருகிலேயே விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் பள்ளம் தோண்டி குழந்தை சடலத்தை புதைத்து உள்ளனர்.
மகளின் தந்தை புகார்: இதனால், சந்தேகமடைந்த டயானாவின் தந்தை சரவணன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ''எனது மகள் டயானாவிற்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 9 நாட்கள் முடிந்த பிறகு தாயும், சேயும் நலமுடன் தான் வீட்டிற்கு சென்றனர். ஆனால், காலை 11.30 மணியளவில் குழந்தை மர்மமான முறையில் மூக்கு, வாயில் ரத்தம் வடிய இறந்து கிடந்தது. மேலும், குழந்தை இறந்த விஷயத்தை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்களுக்கு கூட சொல்லாமல் வீட்டின் அருகிலேயே புதைத்து விட்டனர். எனது பேத்தியின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கான உண்மை காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, மனுவை பெற்று கொண்ட வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், கணவன், மனைவியான ஜீவா மற்றும் டயானா இருவரும் பேசி வைத்தது போல் ஒரே பதில் கூறினர். மேலும், பெற்ற குழந்தை இறந்த துக்கம் கூட இல்லாமல் கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். போலீசாரும் விசாரித்தபடி அவர்களை கண்காணித்து கொண்டே இருந்தனர். பின்னர், இரவு இருட்ட தொடங்கியதும் டயானா தனது முதல் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நைசாக தப்பியோடி விட்டார். போலீசார் சுதாரித்துக் கொள்வதற்குள் ஜீவாவும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் துரத்தி சென்றனர். அங்கு முழுவதும் மலைகள், காடுகள் என்பதால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் காட்டிற்குள் சென்று தலைமறைவாகி விட்டனர். தனது பெற்றோரை காணாமல் முதல் குழந்தை கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த இன்ஸ்பெக்டர் தமிழரசி (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தை புதைத்த இடம், வெட்டப்பட்ட பப்பாளி மரம் மற்றும் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக குழந்தையின் தாத்தா சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற குழந்தைக்கு விஷப்பால் கொடுத்து கொன்ற தம்பதி அதிகாரிகள் கண் முன்னே தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பெண் எஸ்ஐ-யுடன் தகாத உறவு.. வீட்டுக்கு தீ வைத்த கர்நாடகா எஸ்பி.. ஈரோட்டில் பரபரப்பு..!