சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பு சேர்க்கைக் குழுவின் தலைவரும், பதிவாளருமான கெளரி ரமேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ள 23 சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி சட்டப் படிப்பிற்கான (முறைசார்) மாணவர்கள் சேர்க்கையினை ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர சேர்க்கை முறையில் நடத்தி வருகிறது.
மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த B.A.LL.B.(Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B. (Hons.) , B.C.A.LL.B. (Hons.) சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தி வருகிறது.
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மே 10 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் 7042 மாணவர்கள் சீர்மிகு சட்டப்படிப்பிற்கும், 16984 தமிழகத்தில் அமையப் பெற்றுள்ள இணைவு பெற்ற சட்டக்கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர்.
5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்பிற்கு பெறப்பட்ட விண்ணப்பம் செய்த 7042 மாணவர்களில் 6860 விண்ணப்பம் தகுதியானதாகவும், 182 விண்ணப்பங்கள் தகுதி இல்லாமல் உள்ளது. இணைவுபெற்ற சட்டக்கல்லூரிகளுக்கான 5 ஆண்டு பி.ஏ.எல்எல்பி சட்டப்படிப்பிற்கு பெறப்பட்ட 16 ஆயிரத்து 964 விண்ணப்பங்களில் 16922 வுிண்ணப்பம் தகதியானதாகவும், 62 விண்ணப்பம் தகுதி இல்லாமல் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த B.A.LL.B. (Hons.), B.BALL.B.(Hons) B.Com.LL.B.(Hons.) , B.C.A LLB (Hons.) சட்டப்படிப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் அமையப்பெற்றுள்ள இணைவு பெற்ற சட்டக்கல்லூரிகளின் 5 ஆண்டு பி.ஏ.எல்எஸ்.பி சட்டப்படிப்பு ஆகியவற்றிக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைபட்டியல் ஜூன் 6 ந் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் www.tndalu.ac.in வெளியிடப்பட்டது.
சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி 5 ஆண்டு B.A.LL.B. (Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B. (Hons.) & B.C.A.LL.B.(Hons.) சட்டப்படிப்புகள் சேர்க்கையில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டில் அமையப்பெற்றுள்ள இணைவு பெற்ற சட்டக்கல்லூரிகளின் 5 ஆண்டு பி.ஏ.எல்லல்பி சட்டப்படிப்பிற்கான இந்த கல்வியாண்டின் சட்டக்கல்வி சேர்க்கையில் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை காலை 10.30 மணியளவில், சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சீர் மிகு சட்ட பள்ளிக்கான ஒதுக்கீட்டு கடிதம் சட்டப் பல்கலைக்கழக இணையதனத்தில் நாளை (ஜூன் 13) முதல் பதிவேற்றம் செய்யப்படும். இணைவுபெற்ற சட்ட கல்லூரிகளுக்கான 'ஒதுக்கீட்டு கடிதம்' சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 15 முதல் பதிவேற்றம் செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், திருவள்ளூர், மதுரை, திருச்சி, வேலூர், செங்கல்பட்டு (திருப்போரூர் தாலுகா), கோயம்புத்தூர், திருநெல்வேலி, விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, காரைக்குடி உள்ளிட்ட 15 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டிவனம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அரசு சட்டக் கல்லூரியில் 1,692 இடங்களும், தனியார் சட்டக் கல்லூரியில் 312 இடங்களும் உள்ளன.