சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்திய சோதனையில், ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் ரூ.4 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு எந்த ஒரு உரிய ஆவணங்களும் இன்றி கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக, காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூவரிடமும் காவல் நிலையத்தில் கிடிக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் இருந்து பணம் கொண்டுவரப்பட்டதாகவும், இது நயினார் நாகேந்திரன் சொந்தமான பணமும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் காவல் துறையினர் இணைந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும் கைப்பற்றப்பட்ட பணம் அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமை வழிச் சாலையில் உள்ள உணவு விடுதியிலிருந்து பணம் கை மாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி கட்டிடத்தின் உரிமையாளர் பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தன் ஆவார்.
மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான ஹோட்டலிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு ஒரு லட்ச ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, கோவர்தனுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தாம்பரம் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், பணத்தைக் கடத்தி வந்த மூவரில் சதிஷ் என்பவர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பணிபுரிந்து வரும் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு, மூவரும் சேர்ந்து சென்னையில் வெவ்வேறு இடங்களிலிருந்து இந்த பணத்தை ஒன்று சேர்த்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு கொண்டு சென்று தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய இருந்ததாகவும், மூவரும் வாக்குமூலம் அளித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமிருந்தும் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ அடையாள அட்டையின் நகல், பாஜகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மேலும் நான்கு கோடி ரூபாய் பணம் தனக்குச் சொந்தமானது இல்லை என நயினார் நாகேந்திரன் கூறிவந்த நிலையில், தாம்பரம் போலீசார் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், கைப்பற்றப்பட்ட பணம் பணப்பட்டுவாடா செய்வதற்குக் கொண்டு செல்லப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்துவதற்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ. 4 கோடி விவகாரத்தில் காவல் துறை சம்மன் அனுப்பினார்களா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி! - LOK SABHA ELECTION 2024