சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,
- கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10 சதவீதம் அகவிலைப்படி (Dearness Allowance) உயர்த்தி வழங்கப்படும்.
- 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் (Looms and Accessories) வழங்கப்படும்.
- கைத்தறித் துணிகளின் விற்பனையினை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சி ரூபாய் 2 கோடி செலவிலும் 4 மாநில அளவிலான சிறப்பு கைத்தறிக் கண்காட்சிகள் ரூபாய் 1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.
- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பாவு ஓடுதல் மற்றும் கஞ்சி தோய்த்தல் (Warping and Sizing Machines) இயந்திரங்கள் ரூபாய் 1 கோடி செலவில் அமைக்கப்படும்.
- 2 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் (New Handloom Clusters) ரூபாய் 20 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- நெசவாளர்களிடையே பிற மாநில நெசவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு பயணத் திட்டம் (Exposure Visit) ரூபாய் 50 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
- தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 500 பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Skill Development Training) வழங்கப்படும்.
- ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் உள்ள சங்கங்களின் பயன்பாட்டிற்கு ரூபாய் 35 லட்சம் மதிப்பில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரம் (Quilt Stitching Machine) கரூர் சரகத்தில் நிறுவப்படும்.
- நீலகிரி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு எம்பிராய்டரி மற்றும் துணி அச்சிடுதல் (Embroidery and Cloth Printing) போன்ற மதிப்பு கூட்டல் பயிற்சிகள் தேசிய வடிவமைப்பு மையம் (NID) மூலம் ரூபாய் 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
- வேலூர் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூபாய் 1.50 கோடி மதிப்பில் 2 சாயச் சாலைகள் (Dye Houses) அமைக்கப்படும்.
- சின்னாளப்பட்டி செயற்கைப் பட்டுச் சேலைகள், கூரைநாடு சேலைகள், நாகர்கோவில் வேட்டிகள், உறையூர் சேலைகள் மற்றும் குடியாத்தம் லுங்கிகள் ஆகிய 5 பாரம்பரியமிக்க கைத்தறி இரகங்களுக்கு ரூபாய் 15 லட்சம் செலவில் புவிசார் குறியீடு (G.I.) பெறப்படும்.
- ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ரூபாய் 1.50 கோடி செலவில் புதிய பல வண்ண இங்க்ஜெட் பிரிண்டிங் இயந்திரம் (Multi Colour Ink Jet Printing Machine) நிறுவப்படும்.
- கைத்தறித் துறையில் பணிபுரியும் 350 அலுவலர்களுக்கு புத்தாக்கப் (Refresher Training) ரூபாய் 15 லட்சம் செலவில் வழங்கப்படும்.
- ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் 84 அங்குல இரட்டை அகல மடிப்பு இயந்திரம் (Double Width Folding Machine) ரூபாய் 5 லட்சம் செலவில் நிறுவப்படும்.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியை (Export) அதிகரிக்க, சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய வடிவமைப்பு இரகங்கள் (New Designs) உருவாக்கப்படும்.
இதையும் படிங்க: உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்.. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!