மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கிடாரங்கொண்டான், கீழையூர் கிராமங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். கிடாரங்கொண்டான் அரிசி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பாமாயில் மாதிரிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, ஊழியர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கிடாரங்கொண்டான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4 மகளிர் குழுவிற்கு ரூ.20 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.78 லட்சம் மதிப்பிலான 8 டிராக்டர்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்கெனவே ஆள் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் புதிய திட்டங்களை அறிவிக்கும்போது கூடுதல் பணியாளர்களை நியமிக்காததால் பணிச்சுமை கூடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுபடுவதாகத் தெரிவித்தார். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் (டிபிசி), வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், கூட்டுறவுத்துறை விவசாயிகளின் பாலமாகச் செயல்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படக்கூடிய நியாயமான எடை குறைவு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படக்கூடிய எடை குறைவு போன்றவை கொள்முதல் எழுத்தரை பாதிக்காதவாறும், அதனால் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சப் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, இந்த ஆண்டிலேயே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சவுடு மண் குவாரியால் நிலத்தடி நீருக்கு ஆபத்து; பகீர் கிளப்பும் மயிலாடுதுறை விவசாயி!