திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மற்றும் பார்சல்களை ஏற்றிச்சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து மும்பைக்கு பிஸ்கட் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்.1) அதிகாலை சென்று கொண்டிருந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனையடுத்து கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலிகளை உடைத்து, எதிர்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மற்றும் ஓசூரில் இருந்து சென்னைக்கு பார்சல்களை ஏற்றிச்கொண்டு வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி மற்றும் சென்னைக்கு பார்சல்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில், பார்சல் லோடு ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் சிவாஜி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில், சொகுசு பேருந்தில் சென்ற பயணிகள் எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற விபத்து குறித்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10க்குள் ஆண்டு விழா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!