சென்னை: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜெ.செல்வராஜன் என்பவர், அதே பகுதியில் உள்ள மானசரோவர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருசக்கர வாகனம் ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு வாங்கியபோது, நிறுவனம் குறிப்பிட்ட மொத்த தொகையையும் செலுத்தியுள்ளார்.
ஆனால், வாகனத்தை டெலிவரி செய்யும்போது, ஆரம்பத்தில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக 3,200 ரூபாய் வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. வாகனப் பதிவிற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் செலுத்த வேண்டும் எனக் கூறி கூடுதலாக வசூலித்துள்ளதாகவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூபாயை திரும்பத் தர உத்தரவிடக் கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார், ஆர்டிஓ அலுவலகத்திற்கு செலுத்த வேண்டும் என கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை 3,200 ரூபாயையும் மனுதாரருக்கு திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்குச் செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து மனுதாரருக்கு வாகன விற்பனை நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "எல்லாருக்கும் தேங்க்ஸ்..” சிகிச்சை முடிந்து காட்டுக்குள் சென்ற பெண் யானை!