சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள, மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: "எல்ஐசி இணையதளத்தை இந்தி திணிப்பு பிரச்சார கருவியாக மாற்றுவதா?" -முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
இந்த மூன்று வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கிலோ மீட்டருக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல், உயர்மட்ட பாதையில், 76 கிலோ மீட்டருக்கு, 80 ரயில் நிலையங்களும், இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனைகளும் அமைக்கபட்டு வருகின்றன. இந்த பணிகள் எல்லாம் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் (C4-ECV01) தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது, இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வழியில் மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெற்று வந்ததால் அவ்வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்