தூத்துக்குடி: டிஜிட்டல் உலகம் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறதோ அந்த அளவிற்கு வித, விதமான மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக, படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து நடக்கும் மோசடிகம் தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சசிந்தன். இவரது மகன் பிரிசிலன் (22). சிறு வயது முதலே கப்பலில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசைப்பட்ட பிரிசிலன். மரைன் சர்வீஸ் தொடர்பான படிப்பை படித்து முடித்துவிட்டு தீவிரமாக வேலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் ஒன்றில் 'கப்பலில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை' என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக அதில் உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார்.
பின்னர் அதில், விளம்பரம் கொடுத்தவர் மீண்டும் இவரைத் தொடர்பு கொண்டு தற்போது கோவாவில் கப்பல் நிற்கிறது, எனவே, உடனடியாக தங்களுக்குரிய ஆவணங்களை அனுப்பும்படி அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி அனைத்து ஆவணங்களை பிரிசிலன் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து, எல்லாம் சரிபார்த்து விட்டு எனக்கு அந்த கம்பெனியின் அப்ரூவல் கடிதத்தையும், பணி நியமன கடிதமும் இ-மெயிலில் அனுப்பியுள்ளார். அதை வைத்து எனது உறவினர் மூலம் விசாரித்ததில் அந்த கம்பெனியின் கப்பல் கோவாவில் நிற்பது என்பதை பிரிசிலன் தெரிந்து கொண்டுள்ளார்.
பின்னர் தொடர்ந்து, அந்த நபர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, வேலை உறுதியாக வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் முதல் தவணையாக 75 ஆயிரம் செலுத்தச் சொல்லி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, அனைத்தும் சரியாக உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி, முதற்கட்டமாக முத்துகுட்டி சந்தானம் என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.50 ஆயிரம் அனுப்பி உள்ளார். அதன் பின்னர், அதே கணக்கிற்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக ரூ.75 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின் மேற்படி கம்பெனியில் விசாரித்த போது தான் அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. மேலும் அந்த நபரின் செல் நம்பரில் தொடர்பு கொண்ட போது அவை சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரிசிலன், தான் சைபர் க்ரைம் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த பிரிசிலன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது, "கப்பலில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 75 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார்.
இந்த பணத்தை வட்டிக்கு வாங்கி நான் கொடுத்தேன். சமூக வலைதளம் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் என்னை போலவே பலரையும் ஏமாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. இதைப்போன்று மற்றவர்களும் ஏமாறக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு மேற்படி நபரைக் கண்டுபிடித்து பணத்தை மீட்டுத் தருமாறு" கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய வழக்கு.. தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீசார்!