கரூர்: கடவூர் அருகே உள்ள பாலவிடுதி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மூக்கையாபிள்ளை மகன் மகாராஜா (31). இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் இணைந்து டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தங்களுடைய டீக்கடையை விரிவுபடுத்தவும், குடும்பத் தேவைக்காகவும் கடவூர் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் திருவேங்கடம் என்பவரிடம் ரூ.2.5 லட்சம் கடனாகப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
குறைந்த வட்டியில் கடன் என்று நினைத்து வாங்கிய மகாராஜாவுக்கு அடுத்த சில நாட்களில், திருவேங்கடத்தின் நெருக்கடிகள் காரணமாக, ரூபாய் ஏழு லட்சம் வரை வாங்கிய கடனுக்காக பணத்தினை திரும்ப செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் கூடுதல் பணம் கேட்டுள்ளார் திருவேங்கடம், இதற்கு மகாராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மகாராஜாவின் தந்தை மூக்கையா பிள்ளையை, கடத்தி வைத்து கொண்டு பணம் கேட்டதாகவும் கொடுக்கவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக பாலவிடுதி காவல் நிலையத்தில் மகாராஜா தகவல் தெரிவிக்கவே போலீசார் சிபாரிசில் தந்தையை மீட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்று புகார் அளித்த மகாராஜாவை, திருவேங்கடம் மற்றும் அவரது அடியார்கள் மிரட்டி மொத்தமாக 32 லட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என நெருக்கடி செய்துள்ளார்.
இதனால், டீக்கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் பாலவிடுதி காவல் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில், ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்து வந்துள்ளார். இருப்பினும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக மகாராஜா தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து, மனு அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மகாராஜா கூறுகையில், "திருவேங்கடம், தன்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கந்துவட்டி செலுத்தாவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டும் ஆடியோவை காவல்துறையிடம் வழங்கியும், பாலவிடுதி காவல் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் நான்கு நபர்களை வைத்து பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகின்றனர். எனவே தனது குடும்பத்தாருக்கும் தனக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் திருவேங்கடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆட்களை வைத்து மிரட்டல்: தொடர்ந்து அவரது மனைவி நந்தினி கூறுகையில், "தனது கணவர் பெற்ற கடனுக்காக வீட்டை அடமானம் வைத்து 7 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகும் தொடர்ந்து திருவேங்கடம் மற்றும் அவரது ஆட்கள் பணம் கொடுக்காவிட்டால் டீக்கடை நடத்த விட மாட்டோம் என கூறி வருகின்றார்.
மேலும் குடியிருக்கும் வீட்டை எழுதிக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றார். இன்னும் ஒரு வாரக் காலத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால், மீண்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே பாலவிடுதி காவல் நிலையத்தில் அனைத்து புகார் அடிப்படையில் மகாராஜா நாளை ஆகஸ்ட் 13ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு காவல் ஆய்வாளர் அழைப்பானை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்க ஈடிவி பாரத் செய்தியாளர் திருவேங்கடம் செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. குற்றச்சாட்டு தொடர்பாக அவர் தரப்பில் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஒருஒபுறம் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு... மறுபுறம் கள்ள மது விற்பனை அமோகம்! -