சேலம்: சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் அருண் பிரசன்னா. விலங்குகள் நல உரிமைகளின் நிறுவனரான இவர், சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த யூடியூபர் ரகு உள்பட மூன்று பேர், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி, உயிருடன் இருந்த கோழியை ஜல்லிக்கட்டு காளை மாட்டின் வாயில் திணித்து, அதனை தின்ற வைத்து அதை வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை ரகு தனது சமூக வலைத்தளமான யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு மிகக் கொடூரமாக உள்ள அந்த வீடியோவை பார்ப்போர் அனைவரும் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ரகு உள்ளிட்ட மூன்று பேர் மீது தாரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தை முதல் நாள் முதல் மதுரை மாவட்டம் தொடங்கி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இப்படியான சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு!