காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கும் நிர்வாகம் முன்வரதாதைக் கண்டித்து அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடதுசாரி கட்சியினர் இன்று (அக்.5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க : தமிழக அரசு தலையிடுக.. சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக போலீசார் அனுமதி அளிக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாரைக் கண்டித்து இடதுசாரி கட்சியினர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி தலைவர்களான பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இப்படிப்பட்ட போக்கு, ஆரோக்கியமானது இல்லை. ஏற்றுக் கொள்ளத்தக்கதும் அல்ல. சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்