தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாணவி ஒருவர் கல்லூரி கழிப்பறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்து குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்லூரி பணியாளர்கள் வளாகத்தை சல்லடை போட்டு தேடியதில் கழிப்பறை அருகேயு குப்பை தொட்டியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி மாணவியும், அவரது குழந்தையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை (ஜன.30) கல்லூரி முடியும் நேரத்தில் மாணவி ஒருவர் அதிக ரத்த போக்கினால் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பல்லாவரத்தில் பெண் மருத்துவர் சடலமாக மீட்பு... சந்தேகத்தை கிளப்பும் செல்போன் உரையாடல்!
அங்கு அந்த மாணவியை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு குழந்தை பிறந்திருப்பதென்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறந்த குழந்தை எங்கே? என்று போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்க, அவர்கள் அதிர்ந்து போய், சக ஊழியர்களை கொண்டு கல்லூரி வளாகம் முழுவதும் சிசுவை தேடியுள்ளனர்.
அப்போது பெண் குழந்தை ஒன்று குப்பை தொட்டியில் கிடந்ததை கண்டெடுத்து, அதனையும் உடனடியாக சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கும், குழந்தைக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லூரி மாணவியும், அவரது குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார், கல்லூரி மாணவியுடன் பழகி கர்ப்பமாக்கியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.