கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மக்களின் புகழ்பெற்ற கொண்டாட்டமான "கோவை விழா" பல்வேறு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நகரத்தின் சாரத்தை உள்ளடக்கி அதன் கலாச்சாரம், வளமான பாரம்பரியம் மற்றும் சமூக உயிர்ச்சக்தியை வெளிப்படுத்துகிறது.
கோயம்புத்தூர் விழாவின், 17-வது பதிப்பு இன்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் 'டபுள் டக்கர் பேருந்தை' கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வழக்கமாக ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய எந்தந் கட்டணமும் இல்லை. வ.உ.சி பார்க் கேட்டில் இருந்து தொடங்கி காந்திபுரம் வழியாக லட்சுமிபுரம் வரை சென்று அங்கிருந்து திரும்பி மீண்டும் வஉசி பார்க் வந்தடையும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் கூறியிருப்பதற்கு இணங்க உக்கடம், லேக் வியூ உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்க ஆலோசிக்கப்படும் என கோவை விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
டபுள் டக்கர்- சூப்பர் ஹிட்: பஸ் அதேபோல இந்த பேருந்தில் பயணம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே பேருந்தில் பயணம் செய்ய முடியும். இதுகுறித்துப் பேசிய கோவை விழா சேர்மன் அருண் செந்தில்நாதன், "கடந்த கோவை விழாவில் டபுள் டக்கர் பஸ் தான் சூப்பர் ஹிட் ஆனது. இந்த முறை டி20 வேர்ல்ட் கப் கிரிக்கெட் அணி பயணித்த அந்த பேருந்தை கொண்டு வந்துள்ளோம்.
இதையும் படிங்க: "புதிய பாம்பன் ரயில் பாலம் முழுவதும் தயார்" - சிறப்பம்சங்கள் என்ன?
கோவை மக்கள் அனைவரும் இந்த பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும். கோவை விழா இணையதளத்தில் இதற்கான முன்பதிவு பொதுமக்கள் செய்ய வேண்டும். நவம்பர் 24 முதல் டிசம்பர் 1 வரை என கோவை விழா நடைபெறும் 9 நாள்களும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த டபுள் டக்கர் பேருந்து பயணம் செய்ய முடியும். இரண்டு பேருந்துகளிலும் 18 முதல் 20 ட்ரிப் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் மியூசிக் கச்சேரி, ஆர்ட் ஸ்ட்ரீட், மராத்தான், உணவு விழாக்கள், விளையாட்டு நடவடிக்கைகள், 'கிராஸ்ரூட் மோட்டார்ஸ்போர்ட், குதிரை பந்தயம் நிகழ்வுகள், திறமை நிகழ்ச்சிகள் உணவு திருவிழா என 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பதிவு செய்வது எப்படி?
- முதலில் Coimbatore Vizha அல்லது https://coimbatorevizha.theticket9.com/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
- அதன் பிறகு Book now என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்
- பின்னர் நீங்கள் பயணம் செய்யப்போகும் தேதி மற்றும் நேரத்தை உள்ளிடவும்
- தொடர்ந்து உங்களுடைய பெயர், மொபைல் எண், இமெயில் ஆகியவற்றை உள்ளிடவும்
- இதன் பிறகு நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு இ-டிக்கெட் அனுப்பப்படும்