சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று விட்டு, கோயம்புத்தூர் திரும்பிய பள்ளி மாணவி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இறங்கியுள்ளார்.
சென்னையில் தன் மாமாவை அழைத்து, வயிறு வலிப்பதாகக் கூறியதால், ரயில் நிலையம் சென்ற உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்ற பின் வீடு திரும்பிய அவர் மயக்கமடைந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எலினா லேட்டர்(15). இவர் பள்ளியில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக உள்ளார். எலினா லேட்டர், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் (நவம்பர் 18) சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார். அப்போது அவர் ரயிலில் இருந்து சிக்கன் பிரைடு ரைஸ் வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பயணம் செய்த அவருக்கு வாந்தி, மயக்கத்துடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, அவர் சென்னையில் வசிக்கும் தனது மாமாவை தொடர்பு கொண்டு அவர் உதவியுடன் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து அகரம் பகுதியில் உள்ள தன்னுடைய பெரியம்மா வீட்டிற்குச் சென்ற சிறுமிக்கு மீண்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை அவசர ஊர்தி உதவியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமி சாப்பிட்ட உணவில் ஏதேனும் கலந்து இருந்ததா? அல்லது சிறுமிக்கு உடல்குறைவு எதனால் ஏற்பட்டது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நேரத்தில் மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
மாணவியின் மரணத்திற்கு எந்த உணவுப் பொருளும் காரணம் இல்லை எனவும், அவர் விளையாடியதில் ஏற்பட்ட தசைக் கீறல்கள் தான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதாவது, அவரது வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள தசைகள் அழுத்தம் காரணமாகக் கிழிந்துள்ளது. இதுவே மரணத்திற்கு காரணமாகியிருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆனால், உடற்கூறாய்வு முடிந்த பின்னரே முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ரயிலில் சுவைத்த உணவினால் முதலில் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கூடைப்பந்து விளையாட்டின் காரணமாக மாணவி உயிரிந்திருக்கலாம் என மருத்துவர்கள் ஊகித்திருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.