கோயம்புத்தூர்: கோவை அவினாசி சாலை பீளமேடு ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி - கிருத்திகா தம்பதியினர். பழனிசாமி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு 10 வயதில் பிரணவிகா என்ற மகள் உள்ளார். வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பழனிச்சாமி குடும்பத்துடன் சத்தியமங்கலம் சாலையில் உள்ள பிரபல மாலில் பாடம் பார்க்கச் சென்றுள்ளார்.
படம் துவங்கும் முன்னர் திரையரங்கில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும்" என்ற வாசகம் வந்துள்ளது. இதனைப் பார்த்த பிரணவிகா, இதுகுறித்து தன் தந்தையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த விளம்பரம் எழுத்துப் பிழையுடன் வருவதால் இதனைப் பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே அதனை எழுத வாய்ப்புள்ளதாகக் கருதி திரையரங்கு மேலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். அதற்கு "இந்த படத்தின் காப்பி மும்பையிலிருந்து வந்துள்ளது. அதனை தங்களால் மாற்ற இயலாது" என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டி இன்று காலை கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'போர் தொழில்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்!
இதுகுறித்து குழந்தையின் தந்தை பழனிச்சாமி கூறுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்கச் சென்றபோது, படம் துவங்கும் முன்பு வந்த விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை இருப்பதைப் பார்த்து தனது மகள் என்னிடம் கூறினார். மேலும் அதனைச் சரி செய்யாவிட்டால் அதனைப் பார்க்கும் அனைவரும் அதே எழுத்துப் பிழையுடன் எழுத வாய்ப்புள்ளதால் அதனை மாற்ற தமிழக முதலமைச்சருக்கு எனது மகளே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
தமிழை ஊக்குவிக்க தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். துணை முதலமைச்சர் சினிமாவிலும் இருந்ததால், அவருக்கு இதுகுறித்த புரிதல் இருக்கும். எழுத்துப் பிழையை உடனடியாக மாற்றுவார்கள். மேலும் தன்னுடைய மகள் கரோனா காலத்திலும், மழை வெள்ள பாதிப்புகளுக்கும் தான் சேர்த்து வைத்திருந்த தொகையைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்" என்று பழனிச்சாமி தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்