கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், காமாட்சி புரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்(56) நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று(மார்ச்.12) காலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சி புரி ஆதினத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஆதீன வளாகத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்?: ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் கந்தசாமி தேவர் மற்றும் குணவதியம்மாள் இவர்கள் கோவை காமாட்சி புரம் பகுதியில் குடியேறினர். இவர்களுக்கு 5வது குழந்தையாகப் பிறந்த சிவலிங்கேஸ்வரர். இதே பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார்.
பின்னர் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட, நொய்யல் ஆற்றில் கிடைத்த அம்மன் சிலையை எடுத்து வந்து ஆற்றங்கரை ஓரத்தில் நிறுவி அதற்குத் தினமும் பூஜைகள் செய்து வந்தார். பின்னாளில் அது அங்கு பரமேஸ்வரி கோயிலாக மாறியது.
இவரது ஆன்மீக ஈடுபாட்டால் காமாட்சி புரி ஆதீனத்தை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார். கரோனா காலகட்டத்தில் காமாட்சி புரி ஆதீன வளாகத்தில் கரோனா தேவிக்குச் சிலை அமைத்து நோய்த் தொற்று நீங்க சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் வழிபாடு மேற்கொண்டது நாடு முழுவதும் பேசு பொருளானது.
தமிழகத்தில் உள்ள மூத்த ஆதினங்களில் ஒருவரான இவர், விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல கோயில்களைத் தனது சொந்தச் செலவில் புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பல ஆண்டுகள் தேவர் குருபூஜை நிகழ்வை முன் நின்று நடத்தியுள்ளார்.
சமீபத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றிருந்தார் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “முதலமைச்சர் நினைத்தால் நாளையே பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்” - அமைச்சர் ரகுபதி!