கோயம்புத்தூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இதனையொட்டி மருத்துவ மாணவர்கள், மருத்துவ சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் இன்றும், நாளையும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் டீன் அலுவலகம் முன்பு பணிகளை புறக்கணித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் கோயம்புத்தூரில் பெண் பயிற்சி மருத்துவரிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மருத்துவர்களின் இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில், அவசர சிகிச்சைப்பிரிவு பாதிப்பின்றி, தாமதமின்றி இயங்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; கல்லூரி முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை! - Kolkata Doctor Case Update