கோயம்புத்தூர்: கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு Myv3 Ads செயலி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. யூடியூப் சமூக வலைத்தளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மீது மோசடி தொடர்பாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், Myv3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சக்தி ஆனந்த் கடந்த பிப்.10ஆம் தேதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். பின்னர், நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சக்தி ஆனந்த்-ஐ போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்று (பிப்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவண பாபு, ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, Myv3 Ads நிறுவனம் மீது, கடந்த ஜன.31ஆம் தேதி பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும், இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த பிப்.5ஆம் தேதி புகார் மனு அளித்தனர். இவ்வாறு பல தரப்புகளிலிருந்து புகார்கள் கொடுக்கப்பட்டன.
இந்த புகார் மனுக்களில், நிறுவனம் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர், சக்தி ஆனந்த்-க்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பினர். அதன்படி, சக்தி ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்.10ஆம் தேதி MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது, சக்தி ஆனந்த், தன் மீதான குற்றம் நிரூபிக்கும் வரை யாரும் அவதூறு பேசக்கூடாது எனக் கூறி புகார் அளித்தார்.
அப்போது காவல் துறையினர் அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். MyV3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் மட்டும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கலெக்டரை தூக்கினால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும்”.. நெல்லை திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு!