கோயம்புத்தூர் : கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு இன்று மாலை 4 மணிக்கு 169 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ 6E 848 பயணிகள் விமானத்திற்குள் துண்டு சீட்டு ஒன்று கிடந்தது. அதில், விமானத்தை கடத்த இருப்பதாக எழுதப்பட்டு இருந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். விமானத்தில் இருந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஆகியோரையும் விமானத்திலிருந்து, இறக்கி விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியாக அழைத்து வந்தனர்.
இதையும் படிங்க : நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு.. 2 மணி நேர திக் திக் பயணம்.. திருச்சி விமான நிலையத்தில் நடந்தது என்ன?
பின்னர் விமான நிலையத்தில் அனைத்து பயணிகளையும் மீண்டும் சோதனை செய்ததுடன், விமானத்தையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் அது புரளி என தெரியவந்ததையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு சென்னை சென்றது.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் தரையிறங்க முடியாமல், 2 மணிநேரமாக விமானம் வானில் வட்டமடித்த நிலையில் பைலட்டின் சாதுர்யத்தால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்