கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில், அரசு அடுக்குமாடி குடியிருப்பு (ஹவுசிங் யூனிட்) ஒன்று உள்ளது. இங்கு சுமார் 25க்கும் மேற்பட்ட நான்கு தள அடுக்குமாடி கட்டடங்களில், 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பல்வேறு கட்டடத்தின் மேல்புற மாடியில், மழை நீர் தேங்கி கட்டடம் முழுவதும் சேதமாகி காணப்படுவதாகவும், பல்வேறு இடங்களில் பாசிகள் படிந்து சுவர்களில் மின்சாரம் (எர்த்) பாய்வதாகவும், இதனால் வீட்டின் உட்புற சுவர்களும் சேதமாகி மின்சாரம் பாய்வதால் இங்கு வசிப்பதற்கே அச்சமாக உள்ளது எனவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மேல் தளத்தில் இருக்கின்ற வீடுகளுக்கு முன்பு மழை வரும் போதெல்லாம், மழை நீர் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதாகவும், அதனை அகற்றும் போது, கீழ் வீட்டில் வசிப்பவர்களுடன் சங்கடம் ஏற்படுவதாகவும், மேலும் மாடிகளில் செடிகள் முளைத்து மோசமான நிலையில் இருப்பதால், எப்போது இடிந்து விழுமோ என அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் வசித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வீட்டுச் சுவர்களில் மின்சாரம் பாய்வதால், குழந்தைகளை வைத்திருக்க மிகவும் பயமாக இருப்பதாகவும், மழை நீர் மட்டுமல்லாமல் மாடியில் வைக்கப்பட்டுள்ள உப்புநீர் தொட்டிகளும் சேதமாக இருப்பதால், அதிலிருந்தும் நீர் வடிந்து சேதத்தை அதிகமாக ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பல ஆண்டுகளாக இந்த தண்ணீரிலேயே தான் வாழ்ந்து வருகின்றோம். எந்த பயனும் இல்லாமல் வசித்து வருகிறோம். இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வரும் பொழுது கோரிக்கை மனு அளித்த நிலையிலும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், சுவர்களில் மின்சாரம் பாய்ந்து வருவதாகவும், மழைநீர் மட்டுமல்லாமல் உப்பு நீரும் வடிந்து வருவதால், எந்நேரமும் எர்த் அடிக்குமோ என்ற பயத்திலும், எந்த நேரம் கட்டடம் இடிந்து விழும் என்ற அச்சத்திலும் வசித்து வருவதாகவும்" தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்