கோயம்புத்தூர்: மாற்றுத்திறனாளி குழந்தைகள் பொதுக்கல்வி முறையிலிருந்து விலக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும், அவர்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும், அரசு சார்பில் சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான சிறப்பு பள்ளிகள் மட்டுமே இருப்பதால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிப்பை தொடர்வதில் சிரமங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் படிக்க வைக்கும் வகையில், ஒரு இலவச சிறப்பு பள்ளியை நடத்தி வருகிறார், கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான ஜெயபிரபா.
இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், தனது பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து கொண்டு, தன்னைப்போல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இலவசப் பள்ளியை நடத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்த்து வரும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ஏழை பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை வளர்க்க சிரமப்படும் நிலையில், அவர்களின் நிலையைக் கண்டு இந்த இலவசப் பள்ளியை நடத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து, தற்போது 'அப்துல் கலாம் கனவு சிறப்பு பள்ளி' என்ற பள்ளியை நடத்தி வருகிறேன். அனைத்து வகையான மகளிர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி பள்ளி கட்டடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆறு வகுப்புகள் உள்ள இப்பள்ளியில், 23 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளனர். இது தவிர, ஒற்றை பெற்றோர் அதிகமாக மாற்றுத்திறனாளி மாணவர்களை வைத்துள்ளதால், மாணவர்களின் பெற்றோருக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு ஏழு வகையான பயிற்சிகள் இப்பள்ளியில் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களை கையாள்வது குறித்த பயிற்சி பெற்றோருக்கு அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 9 ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளரும் சேர்ந்து மாணவர்களை கவனித்து வருகிறோம்.
தமிழகத்தில் முதல் முறையாக இலவச சிறப்பு பள்ளியை நடத்துவதில் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இலவச வாகன வசதி, மாணவர்களுக்கு இலவச உணவு, இலவசக் கல்வி, இலவச பயிற்சி என முற்றிலும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
அது தவிர, மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட ஒற்றை பெற்றோர் உள்ளதால், அவர்கள் படும் சிரமத்தை உணர்ந்து, சிறப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என எண்ணி பள்ளியைத் துவக்கினேன்.
தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகள் மட்டுமே உள்ளது. அதனை 100 பள்ளிகளாக உயர்த்த வேண்டும். காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் கண் தெரியாதோருக்கு மட்டுமே அதிகமான பள்ளிகள் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ஒற்றை முறையில் மட்டுமே பள்ளிகள் உள்ளதால், இம்மாதிரியான மாணவர்களுக்கு அதிக பள்ளிகளைத் துவக்க வேண்டும்.
சிறப்பு மாணவர்கள் எப்போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என தெரியாது. அவர்கள் ஆசிரியர்களின் முழுக் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பிடித்தமானவற்றைக் கொண்டு, அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
மாணவர்களுக்கான பயிற்சியை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு, இசை மூலமாக கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் தனக்கு முழு மகிழ்ச்சி உள்ளதால், இதனை மேம்படுத்தி அதிகப்படியான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்றார்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினமானது. அவர்களை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத சூழல் இருந்து வரும் நிலையில், இலவசமாக தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைக்கவும், எங்களுக்கென தனித்தொழில் கல்வியும் கற்றுக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக விருப்பமனு தாக்கல் நிறைவு.. இவ்வளவு பேர் போட்டியிட விருப்பமா?