சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.13) நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், அங்குள்ள முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 27 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தமிழக முதலமைச்சர் ஸ்பெயின் சென்று முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டு உள்ளது. முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் இந்த கூட்டத்தில் இடம் பெறும் என்றும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதியை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் காயாகவே உள்ளது பழுக்கவில்லை என மறைமுகமாக கூறியிருந்தார். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் 19ஆம் தேதிக்கு பின்னர் உதயநிதி துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்து இருந்தார். அதனால் இன்றைய கூட்டத்தில் அதற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் ரவுடி மீது என்கவுன்டர்! தலைநகரில் என்ன நடந்தது? - Chennai police Encounter