சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.
நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தோம். அதற்கு கூட நிவாரணத்தொகை தரவில்லை. 30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக்கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
எதிர்கட்சித் தலைவர் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்கு கொடி பிடித்தவர்கள், இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு உங்களது ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்கு நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்பு காட்டவில்லை.
எங்களது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் பணி ஆணைகள் வழங்கப்பட்டன, ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன, அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டன. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன். ஆறு நாட்களுக்கு முன்புகூட பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன்.
இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத்தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்கட்சித் தலைவர் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, எதிர்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசின் 10 சாதனைகள்.. சட்டப்பேரவையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!