சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், குளங்கள், அருவிகள் போன்ற நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை தீவரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஓட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், நீலகிரி ஆட்சியர் காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மரங்களை அகற்றுவது, நிலச்சரிவு ஏற்பட்டால் அதை சீர்செய்வது உள்ளிட்டவைகளில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவது மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். நீலகிரியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்கும் நிலையில், வேறு ஏதேனும் பகுதிகளுக்கு பேரிடர் மீட்புக்குழு அதிகரித்து தேவைப்படுகிறதா என முதல்வர் கேட்றிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கனஅடியை தாண்டிய நீர்வரத்து.. 5வது நாளாக தொடரும் தடை! - Hogenakkal Falls