மயிலாடுதுறை: மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் தனியார் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் சமையல் செய்வதாக கணேசன் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வுக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா கைப்பற்றியுள்ளார்.
அப்போது உணவகத்தில் பணியாற்றுபவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை பிடுங்க முயன்றதாகவும், அதில் சோதனை மேற்கொண்ட அதிகாரிக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, ஹோட்டலுக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டதை கண்டித்து, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வந்த போலீசார், ஹோட்டலுக்கு சீல் வைப்பதாக கூறி அதிகாரிகளை ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், ஹோட்டல் உரிமையாளர் தனக்கு ஆதரவாக இஸ்லாமிய கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, கடைக்கு சீல் வைக்க முயன்றபோது, அதிகாரிகள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர், ஹோட்டலில் உள்ள உணவுகளை சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. ஆய்வு முடிவு வரும்வரை கடையை திறக்க கூடாது எனக்கூறி கடைக்கு பூட்டு போடப்பட்டது. அதன் பின்னர், நகராட்சி அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைக்கவும், அரசு அலுவலர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காவல்துறையில் மனு அளித்தனர்.
இது குறித்து ஹோட்டலின் உரிமையாளர் கூறுகையில், "அதிகாரிகள் காசு இல்லாமல் பிரியாணி கேட்டனர். நாங்கள் தர மறுத்ததால் கடையை சோதனை செய்வதாகக் கூறி தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், நாங்கள் தாக்கியதாக கூறியுள்ளனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்குவதாக அளிக்கப்பட்ட நோட்சுக்கு உரிய விளக்கம் அளித்துள்ளோம்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சதுரங்க வேட்டை படத்தையே ஓரம் தள்ளிய மோசடி.. பிரதமருக்கே லஞ்சம்? திண்டுக்கல்லில் நடந்தது என்ன?