சென்னை: சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அலுவலகத்தின் முன்பு, 2 ஆயிரத்து 850 தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டி சிஐடியு (CITU) சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இதில், 11 கோரிக்கைகளை முன் வைத்து தினக்கூலி மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் கலந்து கொண்ட CITU தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் என்பது ஒரு பொதுத்துறை. தமிழ்நாட்டில் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் பொதுத்துறைகளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பொதுத்துறைகளை தனியாரிடம் வழங்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது.
பொதுத்துறைகளை தனியாருக்கு தந்த நாடுகளெல்லாம் தற்போது மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த வாரியம் பொதுத்துறையாக இருந்தும் கூட 10 ஆயிரம் பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில், 4 ஆயிரம் பேர் தான் வேலை செய்கின்றனர். நமது சட்டத்தில் 480 நாட்கள் தொடர்ச்சியாக பணி புரிந்தால் அவர்களை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும் என்று உள்ளது.
ஆனால் இதுவரைக்கும் இந்த ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்கவில்லை. இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பின்பும் மீண்டும் இந்த அரசு அந்த வழக்கை மேல்முறையீடு செய்துள்ளது. இது காலம் தாழ்த்துவதற்கான செயல், தொழிலாளர்களை சோர்வடைய வைப்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளிக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது போன்ற கீழ்த்தனமான செயலை செய்யமாட்டேன் என்று கூறினார். ஆனால் இந்த ஆட்சியில் அதற்கு மாறாக நடக்கிறது. எல்லோருக்கும் வேலை வழங்க வேண்டும், தினக் கூலியாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் இருப்பவர்களை நிரந்தமாக பணியமர்த்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் அளிப்போம் என்று இவர்கள் போட்ட சட்டத்தையே செயல்படுத்த மறுக்கின்றனர். அதற்கு வழக்கு தொடர்ந்தால் அதை மேல்முறையீடு செய்கின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்வது தொழிலாளிகளுக்கு செய்யும் துரோகம். மேலும், 2003க்கு பிறகு பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கிறோம்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவை வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறப்பு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!