சென்னை : போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் சுமார் 125 லட்சம் ஊழியர்கள், ஓய்வுபெற்ற 95,000 ஊழியர்கள் என சுமார் 2.25 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களும் கடும் நெருக்கடியில் உள்ளன.
இது சம்பந்தமாக கீழ்கண்ட விவரங்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். போக்குவரத்துக் கழகங்களில் மறைமுகமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த பௌர்ணமி திருவண்ணாமலை சிறப்பு இயக்கத்தில் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 1 கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.32 வருவாய் வந்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளுக்கு ரூ.51 அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
![போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-10-2024/22722947_tne.jpg)
இதேபோன்று வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் என நாம் கோரி வரும் நிலையில், தனியார் பேருந்துகளை அமர்த்தி அவர்களுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
போக்குவரத்துக் கழகங்களில் 25,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவைகளில் பணியாளர் நியமனத்திற்கு அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்வது அரசின் கொள்கை முடிவு என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அபிடவிட் செய்துள்ளார்.
![போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-10-2024/22722947_tn.jpg)
இதையும் படிங்க : சென்னை டூ அந்தமான் - தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
15 ஆண்டுகளுக்கு மேலாக வாரிசு பணி மறுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக பல்வேறு காலகட்டங்களில் தொழிற்சங்கங்கள் கூட்டாகவும், தனியாகவும் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.
எனவே, போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் எல்பிஎப், ஏடிபி, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், பணியாளர் சம்மேளனம், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், பாட்டாளி தொழிற்சங்கம், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை ஆகிய அனைத்து கழகங்களிலும் செயல்படும் பேரவை சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அரசுக்கு நிர்பந்தம் அளித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என கருதுகிறோம்.
எனவே, இது சம்பந்தமாக விவாதிக்க அக் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம், சிஐடியு அலுவலகத்தில் நடைபெறும்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-10-2024/22722947_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்