சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சகுந்தலா. ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து, அதன்பிறகு சினிமாவில் அறிமுகமானவர். அப்போது பிரபலமாக இருந்த லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்டோர் நடத்தி வந்த நடன நாடகங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடுவதுதான் அவரது வழக்கம். துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிஐடி சகுந்தலா: சேலத்தைச் சேர்ந்த இவர், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அன்றிலிருந்து சிஐடி சகுந்தலா என அழைக்கப்பட்டார். டான்சராக பல படங்களில் நடித்து, பின்னர் குணச்சித்திரம், கதாநாயகி என படிப்படியாக உயர்ந்தார்.
சிவாஜி கணேசன் உடன் தில்லானா மோகனாம்பாள், பாரத விலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், எம்ஜிஆர் உடனும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது பாடல்கள் அந்த காலத்தில் மிகவும் பிரபலமானவை. நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
பிறகு ஒரு காலகட்டத்தில், சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகு சீரியலில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்புக்கு ஓய்வு தந்து பெங்களூருவில் வசித்து வரும் அவருடைய மகள் வீட்டுக்குச் சென்றவர், அங்கேயே தங்கி இருந்தார்.
மறைவு: இந்த நிலையில், அவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் நடிகையான சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சங்கம் இரங்கல்: "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர், மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்த சிஐடி சகுந்தலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்" என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனுஷ் பட விவகாரம் - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!