சென்னை: திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரின் இல்லத் திருமண நிகழ்ச்சி திருவெற்றியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் பின்னர் ஆற்றிய உரையில், இது எமர்ஜென்சியை எதிர்கொண்ட மீசை பரசுராமனின் இல்ல திருமணவிழா, இன்றும் அவரின் முகம் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கம்பீரமாக மீனவ சமுதாயத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திருவொற்றியூர் மக்களுக்கும் பாதுகாவலனாக இருந்தவர் பரசுராமன்'' என்றார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், திமுக அரசின் திட்டங்களின் மகுடமாக கலைஞரின் 100 ரூபாய் நாணயம் வந்துள்ளது. 100 ரூபாய் நாணயம் தான், ஆனால் அதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய், யார் வேண்டுமானாலும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெற்று கொள்ளலாம்.
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை நேற்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரே சென்று பார்க்க வேண்டும் என்று சொன்னார். முழுமையாக பார்த்து விட்டு, இது போன்று நான் எங்கும் பார்த்தது இல்லை என்று பாராட்டி விட்டு சென்றார்.
மேலும், நேற்று நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் வந்த உடன், பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். ''இந்த அரங்கத்தில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்க'' என்று சொன்னார். இந்த காட்சியை இன்றும் மறக்க முடியவில்லை. இரவு எப்போதும் சோகம் இருந்தால் தூக்கம் வராது.. ஆனால், நேற்று மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. கூட்டணி கட்சிகள், திமுககாரர்கள் என்ன பேசுவார்களோ அதைவிட, அதிகமாக இருந்தது பாதுகாப்புத்துறை அமைச்சரின் உரை. இதை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை'' என்றார்.
மேலும், நாணயம் தமிழில் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு, அரசியல் தெரிந்து இருக்க வேண்டும், அல்லது நாட்டினுடைய நடப்பு புரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும் என விமர்சித்தார்.
தொடர்ந்து, ராகுல் காந்தியை நிகழ்ச்சிக்கு அழைக்காதது குறித்த விமர்சனத்திற்கு பேசிய முதலமைச்சர், இந்த நிகழ்சியை திமுக நடத்தவில்லை, ஒன்றிய அரசு நடத்தியது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இதனால் தான் ராகுல்காந்தியை கூப்பிடவில்லை. இதுபோன்ற சராசரி விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.
மறைந்த முதல்வர் எம். ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்ட போது, ஒன்றிய அரசு எடப்பாடியை ஒரு முதலமைச்சராவோ அல்லது மனுசனாக கூட மதிக்கவில்லை, வர மறுத்துவிட்டார்கள் அதுதான் அவருக்கு மரியாதை.
ஒன்றிய அமைச்சரை நிகழ்சிக்கு கூப்பிட்டதால், திமுக பாஜகவுடன் உறவு வைத்து கொண்டோம் என்று செய்தியை பரப்பி வருகிறார்கள். இதைப் பற்றி ஒவ்வொரு ஊடகங்களிலும், ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்கள். திட்டினாலும் திமுக தான், வாழ்த்தினாலும் திமுக தான். நாங்கள் எல்லாம் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள், பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள்" என இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்.. முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் கைது!