கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் நேற்று (செப்டம்பர் 20) சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடராஜர் கோயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் வரவு - செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கோயிலின் வரவு, செலவு கணக்குகள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கர் அரசாணையின்படி கோயில் நிலங்களுக்கான தனி தாசில்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதிலிருந்து வரும் தொகை, மின் கட்டணமாகச் செலுத்தப்படுகிறது. இது மிகவும் குறைவான தொகையாக இருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆதாரப்பூர்வமாக பெறப்பட்டு, கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2,000 ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்பனை” - அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு!
3 ஆயிரம் ஏக்கரில் ஆயிரம் ஏக்கர் நிலத்திலிருந்து 93 ஆயிரம் ரூபாய் குறைவான வருமானம் வருவதாக கோயில் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அரசு வழக்கறிஞர் எழுந்து, மீதி 2 ஆயிரம் ஏக்கரை தீட்சிதர்கள் விற்று விட்டார்கள் என எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து பொதுவெளியில் செய்தியாக வருவதால், இதுகுறித்து தீட்சிதர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படும்.
ஏற்கனவே, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகம் மீதும், தீட்சிதர்கள் மீதும் தவறான கருத்துக்களை பொது வெளியில் திட்டமிட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த முறை விசாரணையின்போது, 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனால் தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பொதுவெளியில் தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுவதால், இந்த மறுப்பை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பதிவுத்துறைச் சட்டத்தின்படி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் உள்ள நிலங்களை பதிவு செய்ய தடை உள்ளது. நிலை இவ்வாறாக இருக்க, நிலத்தை டிரஸ்ட் ஏற்படுத்தியவரோ அல்லது வேறு நபரோ மூன்றாவது நபருக்கு விற்பதற்கான வாய்ப்பே இல்லை. உண்மை இவ்வாறாக இருக்க, கருத்துகள் வேறு மாறியாக கூறப்படுகிறது” என்றார்.