சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் , பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
வேளச்சேரியில் சூழ்ந்த மழை நீர்
இதனால் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக வேளச்சேரி வண்டிக்காரன் தெரு, நேதாஜி தெரு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குடியிருப்புகளில் முட்டி அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தேங்கியுள்ள மழை நீரில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் வாகனத்தில் இருந்து, கீழ் இறங்கி தள்ளி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இருந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மின் மோட்டார்கள் வைத்து தெருக்களிலும், முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளச்சேரி மேம்பாலம்
அதேபோல், சென்னை, வேளச்சேரி குபேரன் நகர், எல்ஐசி நகர், ஏஜிஎஸ் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு, வேளச்சேரி புதிய மேம்பாலம் மற்றும் பழைய மேம்பாலத்தின் மீது காலை முதல் நிறுத்தி வருகின்றனர்.மேலும், இதேபோல் இந்த மாதத்தில் மட்டும் மழை காரணமாக மூன்றாவது முறையாக மேம்பாலத்தில் அப்பகுதி மக்கள் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது, மழை காரணமாக மக்கள் மேம்பாலத்தின் மீது கார்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் எந்த வித அபராதங்களும் விதிக்கவில்லை எனவும் மழை நின்றவுடன் கார் உரிமையாளர்கள் காரை எடுத்துச் செல்வதாக தெரிவித்ததாக கூறினர்.