சென்னை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) காலை நெல்லையிலிருந்து, ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்குச் செல்வதற்காகத் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பேருந்து நடத்துநரிடம் ஊரப்பாக்கம் செல்ல வேண்டும் என 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு நடத்துநர் சில்லறை இல்லை எனக் கூறி டிக்கெட் தர மறுத்திருக்கிறார். நீண்ட நேரமாக தன்னிடம் வேறு பணம் இல்லை, 200 ரூபாய் தான் இருக்கிறது என இளைஞர் டிக்கெட் கேட்டபடி வந்ததாக தெரிகிறது.
ஆனால் அதற்குள் ஊரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்ததால் மீண்டும் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கொடுங்கள் எனக் கேட்ட பொழுது இளைஞரை நடத்துநர் ஆபாசமாகப் பேசி அடிக்கப் பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த மற்ற பயணிகள் நடத்துநரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இந்த காட்சியைப் பதிவு செய்த இளைஞர் இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ‘டிக்கெட் எடுக்காமல் சென்றால் டிக்கெட் பரிசோதகர் பிடித்துக் கொள்வார்கள், டிக்கெட் எடுக்கப் பணம் கொடுத்தால் சில்லறை இல்லை, எனக் கூறி மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநர் ஆபாசமாகப் பேசலாமா?’ என எழுதியிருந்த நிலையில். இச்சம்பவம் குறித்து பலரும் மாநகர போக்குவரத்துக் கழக நடத்துநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.. போலீசாரிடம் கூறிய பகீர் காரணம்?