சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் நாளை (டிச.08) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில், பயணிகள் நலன் கருதி மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் நாளை (டிச.08) முதல் மறு அறிவிப்பு வரும் வரை அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், நாளை (டிச.08) முதல் அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: கவரப்பேட்டை ரயில் விபத்து: "குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்" - ரயில்வே டிஜிபி தகவல்!
அந்த வகையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.